228 டாஸ்மாக் கடைகள் திறப்பு மது பிரியர்கள் மீண்டும் உற்சாகம்


228 டாஸ்மாக் கடைகள் திறப்பு மது பிரியர்கள் மீண்டும் உற்சாகம்
x
தினத்தந்தி 17 May 2020 9:49 AM IST (Updated: 17 May 2020 9:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 228 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் மது பிரியர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

திருப்பூர்,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆதார் கார்டு நகல் கொண்டு செல்பவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்தார். 8-ந் தேதியும் மதுக்கடைகள் செயல்பட்டன. அதன்பிறகு கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு மதுக்கடைகள் அனைத்தும் 9-ந் தேதி காலை மூடப்பட்டன.

228 கடைகள் திறப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. அந்தந்த கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மூலமாக கடை திறக்கப்பட்டது.

ஒவ்வொரு கடைக்கு முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 238 கடைகள் உள்ளன. இவற்றில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதி மற்றும் வணிக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் உள்பட மொத்தம் 10 கடைகள் திறக்கப்படவில்லை. மீதம் உள்ள 228 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் மது பிரியர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்.

டோக்கன்

ஒரு கடைக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 500 பேர் மது வாங்க அறிவுறுத்தப்பட்டது. மது வாங்க வருபவர்களுக்கு டோக்கன் 7 நாட்களும் ஒவ்வொரு நிறத்தில் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று கருநீலம் நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் கடையின் எண், நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் வீதம் வாங்கும் வகையில் ஒவ்வொரு மணி நேரத்தை டோக்கனில் குறிப்பிட்டு இருந்தனர்.

கடைக்கு மது பிரியர்கள் வந்ததும் டோக்கன் வழங்கப்பட்டது. கிருமிநாசினி வழங்கப்பட்டு, பின்னர் தடுப்புகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றார்கள். மது வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. தேவையான அளவு மதுபாட்டில்களை ஒவ்வொருவரும் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டது.

கூட்டம் குறைந்தது

காலை 10 மணி முதல் 11 மணி வரை திருப்பூர் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு நேரம் செல்ல செல்ல மது பிரியர்களின் கூட்டம் குறைவாக இருந்தது. மதியம் 1 மணிக்கு மேல் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு மது பிரியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

கடந்த 7-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 21 கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. ஆனால் நேற்று 10 கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை. அதிக அளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்ததாலும், மது பிரியர்களின் கையில் பணம் இல்லாததாலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கடந்த 7-ந் தேதி பட்டாசு வெடித்து கேக் வெட்டி டாஸ்மாக் கடை திறப்பை கொண்டாடிய மது பிரியர்கள் நேற்று எந்தவித உற்சாக கொண்டாட்டத்திலும் ஈடுபடாமல் இருந்ததை காணமுடிந்தது.


Next Story