மருத்துவ சிகிச்சைக்காக 635 பேருக்கு தி.மு.க. சார்பில் ரத்தம் வழங்கப்பட்டு உள்ளது செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பேட்டி


மருத்துவ சிகிச்சைக்காக 635 பேருக்கு தி.மு.க. சார்பில் ரத்தம் வழங்கப்பட்டு உள்ளது செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 17 May 2020 9:57 AM IST (Updated: 17 May 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

செந்தில்பாலாஜி, தனியார் ரத்த வங்கியில் தி.மு.க. நிர்வாகிகள் ரத்த தானம் வழங்கியதை பார்வையிட்டு, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

கரூர், 

கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி, தனியார் ரத்த வங்கியில் தி.மு.க. நிர்வாகிகள் ரத்த தானம் வழங்கியதை பார்வையிட்டு, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையால் மாவட்டத்தில் பிரசவம், டயாலிசிஸ், புற்று நோய் போன்றவற்றுக்கு மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த தேவையை கருத்தில் கொண்டு, தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 4-ந் தேதி முதல் யாருக்கெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு தொலைபேசி எண்ணை கொடுத்து தேவைப்படுவோரின் பட்டியல் பெறப்பட்டது. 

இதையடுத்து நேற்று வரை 1,005 பேர் ரத்தத்தை, கொடையாக வழங்கி உள்ளனர். இதன் மூலம் குறிப்பாக 635 நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவியாக இருந்துள்ளது. ரத்தம் கொடையாக கொடுப்பவர்கள் கூட கொரோனா அச்சத்தால் ரத்தம் தர முடியாத சூழ்நிலை இருந்தபோது, கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்தம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. 

மாவட்ட கலெக்டர் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டும் 85 பேர்தான் ரத்த தானம் செய்தனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று கூறியதில் 105 பேர் தான் ரத்த தானம் செய்தனர். இந்நிலையில் உயிர் காக்கும் ரத்தத்தை கொடையாக வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞர்கள் கொடையாக வழங்கியுள்ளனர். இந்த ரத்தம் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் உதவி செய்யவில்லை. ஈரோடு, சேலம், பெரம்பலூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எங்களை தொடர்பு கொண்டவர்களுக்கும் ரத்தத்தை கொடையாக வழங்கி உள்ளோம். தொடர்ந்து ரத்தம் தேவைப்படுவோருக்கு கொடுக்கப்படும், என்றார்.

Next Story