கொரோனா ஊரடங்கால் கவலையில் ஆழ்ந்துள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள்


கொரோனா ஊரடங்கால் கவலையில் ஆழ்ந்துள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள்
x
தினத்தந்தி 17 May 2020 9:59 AM IST (Updated: 17 May 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலையிழந்து கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

அந்தியூர்,

அந்தியூர் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவு முக்கிய தொழிலாக உள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு கைத்தறியில் கால் மிதியடி, ஜமுக்காளம், கைத்தறி பட்டு சேலை போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அந்தியூர் தவிட்டுப்பாளையம், நகலூர், மைக்கேல்பாளையம், சமத்துவபுரம், சந்தியாபாளையம், பிரம்மதேசம், ஆலாம்பாளையம், வெள்ளையம்பாளையம் உள்பட அந்தியூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நெசவாளர்கள் கைத்தறி பட்டு சேலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நெசவாளர்கள் கூறியிருப்பதாவது:-

ரூ.2 லட்சம் வரை...

பட்டு நூல் மற்றும் ஜரிகைகள் பெங்களூரு, கொள்ளேகால், சூரத் ஆகிய பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு கைத்தறி பட்டு சேலை உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி செய்தவற்றை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் ஆர்டர் பெற்று விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். குறைந்தபட்சமாக ஒரு சேலை ரூ.3 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.2 லட்சம் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும் தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கும், அனைத்து விசேஷங்களுக்கும் பெண்களுக்கு தேவையான, பிடித்தமான பட்டு சேலைகளை உற்பத்தி செய்து கொடுக்கிறோம். ஒரு சேலை நெசவு செய்வதற்கு 2 நாட்கள் முதல் 3 நாட்கள் வரை ஆகும். வீட்டிலேயே கைத்தறி போட்டுள்ளதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த தொழிலில் ஈடுபடுவார்கள். ஒரு சேலை உற்பத்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு சுமார் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கூலி கிடைக்கும். அவற்றைக்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை ஓட்டி வந்தார்கள்.

பலகோடி ரூபாய் சேலைகள்

தற்போது ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து வறுமையில் வாடி கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். சேலைகளை உற்பத்தி செய்தும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் பல கோடி ரூபாய்க்கான சேலைகள் தேங்கி உள்ளன.

எனவே நாங்கள் உற்பத்தி செய்து வைத்துள்ள பட்டு சேலைகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து பட்டு சேலை தயாரிப்பதற்கு தேவையான பட்டு நூல் மற்றும் ஜரிகைகளை கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெறுவதற்கும் உதவி செய்யவேண்டும். தற்போதைய நிலையில் நாங்கள் குடும்பத்தை நடத்த எங்களுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நெசவாளர்கள் தெரிவித்தனர்.

Next Story