உசிலம்பட்டி பகுதியில், பலத்த காற்றுடன் கனமழை; வீடுகள் இடிந்து சேதம் - பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்தன
உசிலம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பப்பாளி மரங்களும் வேரோடு சாய்ந்தன.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள உடையம்பட்டி கிராமத்தில் பப்பாளி மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தது. கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு இருப்பது போல் பப்பாளிக்கு இன்சூரன்ஸ் வசதி இல்லை. இதனால் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வருங்காலங்களில் பப்பாளி பயிறுக்கும் இன்சூரன்ஸ் செய்ய அரசு அனுமதி வழங்கினால் இதுபோன்று இயற்கையினால் ஏற்படும் பாதிப்பினால் வரும் நஷ்டத்தில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகளை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வேப்பனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பேயம்பட்டி, ஓணாப்பட்டி, காரிகுட்டிபட்டி ஆகிய ஊர்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி தாசில்தார் செந்தாமரை மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story