இ-பாஸ் முறையில் மாற்றம்: எந்த ஊருக்கு செல்கிறோமோ, அந்த மாவட்ட கலெக்டர்தான் அனுமதிக்க வேண்டும் - புதிய விதிமுறை அமலானது
இ-பாஸ் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த ஊருக்கு நாம் செல்வதற்கு விண்ணப்பம் செய்கிறோமோ, அந்த மாவட்ட கலெக்டர்தான் இனி அனுமதி தர வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மதுரை,
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காரணங்களுக்காக அதாவது மரணம், மருத்துவ பயணம், திருமணம் மற்றும் சொந்த ஊர் திரும்புதல் போன்றவைக்காக அனுமதி தரப்படுகிறது.
இந்த அனுமதியை எளிதாக வழங்குவதற்காக தமிழக அரசு www.tne-pass.tne-ga.org என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளம் வாயிலாக பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுமக்கள் விண்ணப்பம் பெறப்பட்டவுடன், அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும். அதாவது எந்த மாவட்டத்தில் இருந்து அந்த விண்ணப்பம் பெறப்படுகிறதோ, அந்த மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும். அவர் அதனை பரிசீலனை செய்து அனுமதி தருவார் அல்லது நிராகரிப்பார்.
தற்போது இந்த இ-பாஸ் முறையில் ஒரு மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுமக்கள் வழக்கம் போல் அதில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அவர் எந்த மாவட்டத்திற்கு செல்கிறோரோ, அந்த மாவட்ட கலெக்டருக்கு இந்த விண்ணப்பம் அனுப்பப்படும். அவர் இதனை பரிசீலித்து அனுமதி தருவார்.
அதாவது அந்த நபர் எந்த மாவட்டத்திற்கு செல்கிறாரோ அந்த மாவட்ட கலெக்டரிடம் அது பற்றிய தகவல்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்காரணமாக தற்போது மதுரை மாவட்டத்திற்கு வருவதற்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களின் ஏராளமான விண்ணப்பங்கள் மதுரை கலெக்டருக்கு வந்துள்ளன. அவர் அதன் உண்மை தன்மை அறிந்து அனுமதி வழங்குவார். மேலும் வெளிமாவட்டத்தில் இருந்து மதுரை வரும் நபர்கள் அவர்கள் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
கடந்த காலங்களில் துக்க நிகழ்ச்சிக்கு இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் அது உண்மைதானா என்பதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் தினமும் 50 எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன.
எனவே இவை அனைத்தையும் நேரடியாக சென்று பரிசீலித்து அனுமதி வழங்குவது இயலாத காரியமாக உள்ளது. எனவே ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த புதிய விதிமுறையின்படி அனுமதி தரப்படுகிறது.
Related Tags :
Next Story