கொரோனா பரிசோதனையில் தேனி மாவட்டம் 2-வது இடம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்


கொரோனா பரிசோதனையில் தேனி மாவட்டம் 2-வது இடம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 17 May 2020 11:43 AM IST (Updated: 17 May 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனையில் சென்னைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்திட அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட எல்லைப்பகுதியில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்ட பயணிகளை தேவதானப்பட்டி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி தேவையான நபர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

அதுபோல், கேரள மாநிலம் வழியாக வரும் பயணிகளை குமுளி லோயர்கேம்ப் சோதனைச்சாவடியிலும், பிற வெளிமாநில பயணிகளை ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனூர் சோதனைச்சாவடியிலும் வாகன தணிக்கை செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 198 மாதிரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனை மேற்கொண்டதில் 79 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 119 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் பரிசோதனை எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில், தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story