தேனி மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் - மதுபானங்களை மொத்தமாக அள்ளி சென்றனர்


தேனி மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் - மதுபானங்களை மொத்தமாக அள்ளி சென்றனர்
x
தினத்தந்தி 17 May 2020 12:45 PM IST (Updated: 17 May 2020 12:45 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மொத்தமாக அள்ளி சென்றனர்.

தேனி,

டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் 94 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், கொரோனா வைரஸ் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள 55 கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

கடந்த 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது ஒவ்வொரு கடையிலும் ஆயிரக்கணக்கான மதுப்பிரியர்கள் குவிந்தனர். ஆனால், நேற்று அந்த அளவுக்கு கூட்டம் இல்லை. இருப்பினும், நூற்றுக்கணக்கான மதுப்பிரியர்கள் ஒவ்வொரு கடைகளிலும் குவிந்து இருந்தனர்.

தேனி, கொடுவிலார்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 8 மணிக்கே மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்து காத்திருந்தனர். டோக்கன் வினியோகம் செய்யத் தொடங்கியதை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக் கொண்டு டோக்கனை பெற்றனர்.

ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கடைகளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி, சமூக இடைவெளியுடன் மதுப்பிரியர்களை நிற்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். டாஸ்மாக் கடைகளின் முன்பு கம்புகள் கட்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அத்துடன் ஒலி பெருக்கிகளும் பொருத்தப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவிப்புகள் செய்யப்பட்டன.

ஒவ்வொரு கடையிலும் 500 டோக்கன்களுக்கு மேல் வினியோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், 500 டோக்கன் வழங்கிய பின்னர் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் பிற்பகலுக்குள் 500 டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டன. இதனால், மாலை 3 மணியளவில் ஏராளமான கடைகளில் மதுவிற்பனை நிறுத்தப்பட்டது.

தேனி புறவழிச்சாலை, ரத்தினம் நகர், டொம்புச்சேரி, கொடுவிலார்பட்டி, கண்டமனூர் உள்பட பல்வேறு இடங்களிலும் மதுப்பிரியர்கள் குவிந்தனர். அதே நேரத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மயிலாடும்பாறை அருகே மூலக்கடையில் உள்ள டாஸ்மாக் கடை வெறிச்சோடி காணப்பட்டது.

மதுவாங்க வந்த மதுப்பிரியர்கள் கை கழுவுவதற்கு சில டாஸ்மாக் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சில கடைகளில் வரிசையில் நின்றவர்களின் கைகளில் சானிடைசர் திரவம் வழங்கி கைகளை சுத்தம் செய்ய டாஸ்மாக் பணியாளர்கள் அறிவுறுத்தினர். மதுபான பாட்டில்களை வாங்கிய பின்பு அவற்றை துண்டில் கட்டியும், தலைக்கவசத்திற்குள் வைத்தும், பைகளில் போட்டும் எடுத்துச் சென்றனர்.

மதுபானம் வாங்கிய பலரும் அவற்றை கடைக்கு அருகிலும், செல்லும் வழியில் உள்ள காலியிடங்களிலும் அமர்ந்து குடித்தனர். இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் திறந்தவெளிகள் மதுபான பார்களாக மாறின. மதுக்கடைகள் அருகில் சிலர் சுண்டல், தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.

Next Story