புளியங்குடி நகராட்சியில் 5 வார்டுகள் தவிர மற்ற இடங்களில் கடைகளை திறக்க அனுமதி - சமாதான கூட்டத்தில் முடிவு


புளியங்குடி நகராட்சியில் 5 வார்டுகள் தவிர மற்ற இடங்களில் கடைகளை திறக்க அனுமதி - சமாதான கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 17 May 2020 10:45 PM GMT (Updated: 17 May 2020 7:26 PM GMT)

புளியங்குடி நகராட்சியில் 5 வார்டுகள் தவிர மற்ற இடங்களில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புளியங்குடி, 

புளியங்குடியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டி புளியங்குடி வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அனுமதி தராவிட்டால் இன்று (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், நகரசபை ஆணையாளர் குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து வர்த்தக சங்கத்தினர் இன்று அறிவித்திருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நகரசபை அலுவலகத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் இதுகுறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் பழனிகுமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

புளியங்குடி நகரசபை பகுதியில் உள்ள சிறுகுறு வணிக நிறுவனங்கள், வணிகர்கள், வியாபாரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் கடைகளை திறப்பதற்கு அரசின் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். சிறு, குறு கடைகள், உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற சுயதிறன் பணியாளர்கள் கட்டாயம் முக கவசம், கையுறை அணிய வேண்டும். உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும்.

முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது. கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் வருவதை பதிவேடு மூலம் முகவரி, செல் நம்பர் பதிவு செய்ய வேண்டும். கடையில் உள்ள பணியாளர்கள் பணி நேரத்தில் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் தவறும் பட்சத்தில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதிகாரிகள் ஆய்வு

காய்ச்சல், இருமல், தொண்டைவலி அறிகுறிகளுடன் பணியாளர்கள், பொதுமக்கள் தங்கள் கடைக்கு வந்தால் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அரசு உத்தரவின்படி கொரானா பாதிப்புள்ள வார்டுகளில் முழுமையாக எவ்வித கடையும் அனுமதிக்கப்படமாட்டாது. புளியங்குடி நகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட வார்டு எண் 1, 9, 14, 19, 21 ஆகிய 5 வார்டுகள் தவிர இதர இடங்களில் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டது.

இன்று முதல் பலசரக்கு கடை அரிசி காய்கறி கடைகளும், நாளை மறுநாள் முதல் பர்னிச்சர் கடை, ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல் கடைகளும், 22-ந்தேதி முதல் செல்போன், ஜவுளிக்கடை, பாத்திரக்கடைகளும், 23-ந் தேதி முதல் இருசக்கர வாகன ஷோரூம், 24-ந்தேதி முதல் வாகன கடை மற்றும் இதர கடைகள் திறக்கப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட 5 வார்டுகளில் தடையை மீறி கடைகளை திறந்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story