வெங்கமேடு மேம்பாலம் அருகே புதிய பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
வெங்கமேடு மேம்பாலம் அருகே புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
கரூர்,
கரூர் அருகே அணைப்பாளையத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தொடங்கி கருப்பம்பாளையம், செல்லாண்டி பாளையம் உள்ளிட்ட பகுதி வழியாக வெங்கமேட்டை கடந்து சோழூர் வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்து விவசாய தேவைகளையும் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து அமராவதி ஆற்றில் கலக்கும் வகையில் அமைந்திருப்பது கரூர் ராஜவாய்க்கால். இந்த வாய்க்கால் வெங்கமேடு மேம்பாலம் இறக்கத்தில் நெடுஞ் சாலையை கடந்து செல்வதால் அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் செல்லும் வகையில் சிறு பாலம் கட்டப்பட்டிருந்து.
இந்நிலையில் அப்பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் வாய்க்காலில் தண்ணீர் வரும் போதும், மழை காலங்களிலும் தண்ணீர் செல்லாமல் பாலத்தின் மீது உள்ள சாலைகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கும். மேலும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கழிவுகளும் அதில் கலந்து துர்நாற்றம் வீசியது. பாலம் பழுது அடைந்ததால் அந்த பாலத்தை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் திட்ட மதிப்பீடு தயாரித்து, ரூ.50 லட்சத்தில் புதிய பாலம் கட்ட முடிவு செய்தனர்.
இதையடுத்து ராட்சத எந்திரத்தின் உதவியுடன் சாலை தோண்டப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் வெங்கமேடு, வாங்கப்பாளையம் மற்றும் மண்மங்கலம், நன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூர் வருபவர்கள் மற்றும் கரூர் நகரில் இருந்து வெங்கமேட்டை கடந்து செல்பவர்கள் இச்சாலையை பயன் படுத்த முடியாத நிலை உள்ளது.
அவர்கள் பெரியகுளத்துப்பாளையம் குகை வழிப்பாதை வழியாகவும், புறவழிச்சாலை வழியாகவும் சென்று வருகின்றனர். இதனால் குகை வழிப்பாதை வழித்தடத்தில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்காலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 60 நாட்களில் பாலம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்படும், என்று கூறினார்கள்.
Related Tags :
Next Story