மாவட்டத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு


மாவட்டத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 17 May 2020 11:45 PM GMT (Updated: 17 May 2020 7:48 PM GMT)

மாவட்டத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கரூர், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் சில நிபந்தனைகளுடன், தமிழக அரசு அறிவித்தபடி கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அன்றும், மறுநாளும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றது.

இதற்கிடையே நிபந்தனைகளை மீறியதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் 8-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்படி கரூர் மாவட்டத்தில் 95 கடைகள் நேற்று திறக்கட்டது. ஒவ்வொரு கடையிலும் 500 பேருக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என்று வரைமுறை வகுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மது வாங்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்களை ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகள் வழியாக வரிசையாகவும், முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் நிற்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

மது வாங்க வந்த அனைவரும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே, மது வாங்க அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருந்த நிலையில், பெரும்பாலான கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தாலும், மக்களிடம் கையில் காசு இல்லாத நிலை உள்ளதால், மதுக்கடைகளில் கூட்டம் குறைந்து உள்ளதாக, கூறினர்.

குளித்தலை பகுதியில் உள்ள மதுக்கடைகளில் காலை முதலே மதுப்பிரியர்கள் டோக்கன் வாங்கிக்கொண்டு நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். குளித்தலை நகரப்பகுதியில் பெரியபாலம் மற்றும் சுங்ககேட் பகுதியில் உள்ள மொத்தம் 3 கடைகளிலும் தலா 500 பேருக்கு டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கன் பெற்ற அனைவரும் மதுபாட்டிகள் வாங்கிச்சென்ற பின்னர், மாலை சுமார் 4.30 மணிக்குள் விற்பனை முடிக்கப்பட்டு மதுக்கடைகள் சாத்தப்பட்டது. அப்போது மதுப்பிரியர்கள் பலர் மதுபாட்டில்கள் வாங்க வேகவேகமாக வந்தனர். ஆனால் அவர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

குளித்தலை அருகே உள்ள திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கொரோனா பரவல் காரணமாக அங்குள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. அதன் காரணமாக முசிறி பகுதியை சேர்ந்த பலர் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள குளித்தலை பகுதிக்கு வந்து நேற்று மதுபாட்டில்கள் வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக டோக்கன்கள் விரைவில் வினியோகிக்கப்பட்டதாக மதுக்கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். மதுபாட்டில்கள் வாங்கிச்சென்ற பலர் ஆங்காங்கே மது அருந்திய காட்சியையும், மதுபானக்கடை அருகிலேயே மதுபோதையில் மயங்கி கிடந்ததையும் காண முடிந்தது.

வேலாயுதம்பாளையம் அருகே சின்னவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லை. ஆனால் இங்கிருந்து என்.புதூரில் (நன்னீர்புதூர்) 2 கிலோ மீட்டர் தூரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகே உள்ளதால் இந்த டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நொய்யல் பகுதியில் மரவாபாளையம், புன்னம்சத்திரம், மசக்கவுண்டன்புதூர் பிரிவு ரோடு, வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. ஆனால் அதிக அளவில் மதுப்பிரியர்கள் மது வாங்க வரவில்லை. பலர் மதுபாட்டில்களை பைகளில் வாங்கிச்சென்றனர். ஒரு திருநங்கையும் வரிசையில் நின்று மதுபாட்டில் வாங்கிச்சென்றதை காண முடிந்தது. மதுபாட்டில்களில் போடப்பட்டுள்ள விலையை விட ரூ.30 முதல் ரூ.40 வரை அதிகமாக கேட்பதாக கூறி, சில நேரங்களில் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதேபோல் க.பரமத்தி பகுதியில் தென்னிலை, க.பரமத்தி பகுதிகளிலும், லாலாப்பேட்டை பகுதியிலும் என மாவட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

Next Story