உலகை சுற்றும் கப்பல் மாலுமிகளை கலங்கடித்த கொரோனா
உலகை சுற்றும் கப்பல் மாலுமிகளையும் கொரோனா வைரஸ் கலங்கடித்து உள்ளது. அவர்கள் விடுமுறைக்கு செல்ல முடியாமல் கப்பலிலேயே தவித்து வருகின்றனர்.
ஆறுமுகநேரி,
பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் கப்பல் கட்டும் கலையில் சிறந்து விளங்கினர். சோழ பேரரசர்கள் கடல் கடந்து நாடுகளை வெற்றி கொண்டதையும், கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதையும் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பூம்புகார், கொற்கை, குலசேகரன்பட்டினம், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களின் வழியாக அயல் நாடுகளுடன் பண்டமாற்று முறையில் வணிகம் செழித்தோங்கியது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வெற்றி கண்ட, ‘கப்பலோட்டிய தமிழன்‘ வ.உ.சிதம்பரனார் வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
பாய்மர கப்பல், மீன்பிடி கப்பல், சரக்கு கப்பல், பயணிகள் கப்பல் என்று பல்வேறு காலகட்டங்களிலும் மக்களின் தேவைக்கு ஏற்ப கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. தற்போது பல லட்சம் டன் சரக்குகளை சுமந்து செல்லும் வணிக கப்பல்களும், அதிநவீன சொகுசு வசதிகளுடன் உலகை சுற்றி வரும் உல்லாச கப்பல்களும், நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் கடற்படை கப்பல்களும் அதிகளவில் உள்ளன.
வணிக கப்பல்கள், சொகுசு கப்பல்களில் பணியாற்றும் கேப்டன்கள், என்ஜினீயர்கள், மாலுமிகள் ஆண்டு முழுவதும் கப்பலிலேயே பயணித்து பல்வேறு நாடுகளையும் சுற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சில மாதங்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றனர்.
பல்வேறு கப்பல் நிறுவனங்களிலும் ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்துகின்றனர். பெரும்பாலும் 9 மாதங்கள் கப்பலில் வேலையும், 3 மாதங்கள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. விடுமுறை முடிந்து கப்பலுக்கு ஊழியர்கள் திரும்பி வரும்போதுதான், அங்குள்ள மற்ற ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்களை பல்வேறு நாடுகளுக்கும் சுமந்து செல்லும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், அது கப்பல் மாலுமிகளையும் விட்டு வைக்கவில்லை. மாதக்கணக்கில் கப்பலிலேயே பயணிக்கும் மாலுமிகள் தங்களது ஒப்பந்த காலம் முடிந்த பின்னர், அவர்களுக்கான மாற்று மாலுமிகள் கப்பலுக்கு வந்து சேர்ந்தவுடன், அங்கிருந்து விமானத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வர்.
இதற்கிடையே, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், விடுமுறையில் வந்த மாலுமிகள் மீண்டும் கப்பலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கப்பலில் உள்ள மாலுமிகளும் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் விடுமுறைக்கு வீடு திரும்ப முடியாமல் பரிதவிக்கின்றனர்.
இதுகுறித்து புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமிகள் கூறியதாவது:-
உலகில் மூன்றில் இருபங்கை சூழ்ந்த பெருங்கடலிலேயே கப்பல் மாலுமிகள் ஆண்டு முழுவதும் குடும்பத்தை மறந்து பயணித்து வேலை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, புன்னக்காயல், திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம், அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் மாலுமிகளாக கப்பல்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் கப்பல்களில் வேலைக்கு செல்வார்கள்.
தற்போது பெரும்பாலானவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இவர்கள் கப்பல்களுக்கு வேலைக்கு சென்றால்தான், அங்கு பணியாற்றும் மாலுமிகளை விடுவித்து விடுமுறைக்கு அனுப்புவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கால், வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக மட்டுமே சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாலுமிகள் கப்பல்களுக்கு மீண்டும் பணிக்கு செல்ல முடியாததால், அங்கு பணியாற்றுகின்ற மாலுமிகள் பல மாதங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால் தவிக்கின்றனர். உலகை சுற்றும் கப்பல் மாலுமிகளையும் கொரோனா கலங்கடித்துள்ளது. எனவே, கொரோனா முற்றிலும் ஒழிந்து, மீண்டும் எப்போது விமானங்கள் இயக்கப்படும்? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story