திருவள்ளூரில் ரெயில் மோதி டிக்கெட் பரிசோதகர் சாவு


திருவள்ளூரில் ரெயில் மோதி டிக்கெட் பரிசோதகர் சாவு
x
தினத்தந்தி 18 May 2020 4:00 AM IST (Updated: 18 May 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் ரெயில் மோதி டிக்கெட் பரிசோதகர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் ராஜாஜிபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 45). இவர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் முதுகலை டிக்கெட் பரிசோதகராக இருந்தார். இவருக்கு தீபா (37) என்ற மனைவியும், பிரதீப் ராகவேந்திரன் (18) என்ற ஒரு மகனும் உள்ளனர். நேற்று டிக்கெட் பரிசோதகரான பரந்தாமன் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்தார்.

அவர் 2-வது நடைமேடையில் சக டிக்கெட் பரிசோதகர்களுடன் நின்று டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துக்கொண்டு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.

சாவு

அப்போது திடீரென டீ குடித்து கொண்டிருந்த பரந்தாமன் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சரக்கு ரெயில் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை பார்த்த அங்கு இருந்த சக டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பரந்தாமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் அவர் இறந்தாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story