வாலாஜாபாத் அருகே, டாஸ்மாக் கடையை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க முயற்சி - 5 பேர் கைது
வாலாஜாபாத் அருகே டாஸ்மாக் கடையை அரசு அனுமதியின்றி ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபாத்,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனை நடைபெறுவதையும் மது பிரியர்கள் நிற்பதையும் படம்பிடிக்க ஆளில்லா குட்டி விமானம் பறந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆளில்லா குட்டி விமானம் பறப்பதை அறிந்து ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலர் அருணகிரி வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாலாஜாபாத் போலீசார் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்து கொண்டிருந்த பாண்டூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 30), லிங்கேஸ்வரன் (28), காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த சரண் (23), பாலாஜி (21), உசேன் (29) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். சமூக வலைதளங்களில் வெளியிடவும், செய்தித்தாள், மற்றும் ஊடகங்களுக்கு வழங்குவதற்காக படம் பிடித்ததாகவும் அதற்கான அரசு அனுமதி எதையும் பெறாதது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள், ஆளில்லா குட்டி விமானம் போன்றவற்றை கைப்பற்றினர்.
Related Tags :
Next Story