தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் பெரும்பாலான கடைகள் திறப்பு - மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரிகள் கவலை
சென்னையின் குட்டி வணிகத்தீவு என அழைக்கப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்தபடி மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை,
சென்னையின் வர்த்தக பிரதேசம் என்றும், குட்டி வணிகத்தீவு என்றும் அழைக்கப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு எப்போதுமே பரபரப்புக்கு பெயர் பெற்றது. அந்தளவு எந்நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். திருவிழா காலங்களில் சொல்லவே வேண்டாம், அந்தளவு மக்கள் தலைகளாகவே இப்பகுதி காட்சி அளிக்கும்.
எப்போதும் பரபரப்புடனும், சுறுசுறுப்புடனும் காணப்படும் ரங்கநாதன் தெருவுக்கு கொரோனாவால் ஓய்வு கொடுக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக தெருவில் உள்ள சிறியதும், பெரியதுமான 400-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வு எதிரொலியாக ரங்கநாதன் தெருவில் இடைவெளி விட்டு கடைகளை திறந்து கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்தது. ஆனாலும் ரங்கநாதன் தெருவில் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் சென்னையின் முக்கிய வணிக பிரதேசம் தற்காலிகமாக முடங்கி போனது.
உயிர் பெற்ற கடைகள்
இந்தநிலையில் குட்டி வணிகத்தீவான ரங்கநாதன் தெருவில் முடங்கி கிடந்த கடைகள் மீண்டும் உயிர் பெற தொடங்கி உள்ளன. ரங்கநாதன் தெருவில் செருப்பு, கவரிங் நகை, பேன்சி கடைகள், செல்போன், பேக் கடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஜூஸ் கடைகள் என பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. அந்தவகையில் ரங்கநாதன் தெருவில் 70 சதவீத கடைகள் நேற்று திறந்திருந்ததை பார்க்க முடிந்தது. ஒரு சில துணிக்கடைகளும் திறந்திருந்தன.
மேலும் ரங்கநாதன் தெருவில் போலீசார் அடிக்கடி ரோந்து செல்கிறார்கள். சாலையில் பலகைகள், பெட்டிகள் எதுவும் வைக்கக்கூடாது, கடையில் இருந்து எந்த பொருளும் வீதிக்கு வரக்கூடாது என்று பல கண்டிப்பான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்கள், மூடியுள்ள கடைகளின் வாசல்களில் அமர்ந்திருப்பவர்களையும் விரட்டினர்.
வியாபாரிகள் கவலை
நீண்ட நாட்களாக கடைகள் திறக்காத நிலையில் வெறிச்சோடி இருந்த ரங்கநாதன் தெருவில் தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். அந்தளவு நேற்று குறைவான அளவிலேயே ரங்கநாதன் தெருவில் மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது.
இதுகுறித்து வியாபாரி எஸ்.மாணிக்கராஜன் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முறைகளை கடைக்காரர்கள் முறையாக கடைபிடித்து வருகிறோம். ஏ.சி. பயன்படுத்துவது கிடையாது. வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கடைக்குள் நுழைய வேண்டும் என்று ‘கரார்’ ஆக சொல்கிறோம். மேலும் கடையிலும் குறைவான அளவிலேயே பணியாளர்களும் இருக் கிறார்கள். ஆனாலும் மக்கள் நடமாட்டம் எதிர்பார்த்தபடி இல்லாததால் வியாபாரமே நடக்கவில்லை. வியாபாரம் மந்தநிலை காரணமாக கடைக்காரர்கள் தவித்து வருகிறோம். நிலைமை என்று சீராகும்? என்றே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story