மாகிம் ரெயில் நிலையப்பகுதியில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்


மாகிம் ரெயில் நிலையப்பகுதியில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 18 May 2020 4:30 AM IST (Updated: 18 May 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாகிம் ரெயில் நிலையப்பகுதியில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தமிழக தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

மும்பை, 

தமிழகத்தை சேர்ந்த 250-க்கும் அதிகமான தொழிலாளர்கள், குடும்பத்தினர் ரெயில்வே ஒப்பந்த பணியில் ஈடுபட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வழக்கமாக இவர்கள் மார்ச் மாதம் வேலை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் மும்பையில் சிக்கினர். மேலும் மாகிம் ரெயில் நிலையப்பகுதியில் திறந்தவெளியில் உணவு உள்பட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வந்தனர்.

இது குறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து பல்வேறு தரப்பினர் ரெயில்நிலைய பகுதியில் சிக்கியிருந்த தமிழக தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் சிக்கிய ஆயிரக்கணக்கான வடஇந்தியர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். ஆனால் ரெயில் நிலைய பகுதியில் வசித்து வரும் தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மும்பை - தமிழகம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படாததால் பொறுமை இழந்த தொழிலாளர்கள் சுமார் 10 கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தே சொந்த ஊர் திரும்பினர். எனினும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இந்தநிலையில் மாகிமில் சிக்கி தவித்து வரும் முருகன் என்ற தொழிலாளி கூறியதாவது:-

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அரசு அறிவித்தவுடன் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஆயிரம் பேர் இருந்தால் தான் தமிழகத்துக்கு சிறப்பு ரெயில் இயக்க முடியும் என அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர். நாங்கள் ஆயிரத்துக்கு குறைவாகவே உள்ளோம்.

இதேபோல சிறப்பு ரெயில் இயக்க தமிழக அரசு சம்மதிக்கவில்லை எனவும் சொல்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பஸ்சில் செல்லவும் வசதியில்லை. மற்ற மாநிலத்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாங்கள் மட்டும் கைவிடப்பட்டுள்ளோம்" என்றார்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சாமி என்பவர் கூறுகையில், ‘‘எங்களுக்கும் வாழ உரிமை இருக்கிறது. ரெயிலில் வீடு திரும்பவும் உரிமை இருக்கிறது. எங்கள் குறைகளை தீர்க்க மத்திய அரசு ஏன் முயற்சி செய்யவில்லை. பல்வேறு தரப்பினர் எங்களுக்கு உணவு தருகிறார்கள். ஆனால் எங்களுக்கும் தன்மானம் உள்ளது. நாங்கள் எங்கள் வீட்டுக்கு செல்லவே விரும்புகிறோம்.

இன்னும் 20 நாட்களில் இங்கு மழைக்காலம் தொடங்கிவிடும். அதன்பிறகு திறந்தவெளியில் எங்களால் இங்கு வசிக்க முடியாது. எனவே சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுடன் உள்ள எங்களை விரைவில் சொந்த ஊருக்கு அழைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Next Story