கொரோனா பரவலால் இழுத்து மூடப்பட்ட நவிமும்பை மார்க்கெட் இன்று திறப்பு - வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்
கொரோனா வைரஸ் பாதிப்பால் இழுத்து மூடப்பட்ட நவிமும்பை மார்க்கெட் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
நவிமும்பை வாஷியில் வேளாண் உற்பத்தி சந்தை குழுவான ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் வியாபாரிகள், மாத்தாடி தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 11-ந் தேதி முதல் ஒரு வாரம் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பின் படி மார்க்கெட் இழுத்து மூடப்பட்டதால் இங்கிருந்து மும்பை, தானே, நவிமும்பை பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் விலைவாசியும் உயர்ந்தது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தநிலையில், வியாபாரிகளுடன் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டின் நிர்வாக அதிகாரிகள், தொழிலாளர்கள் சங்கத்தலைவர், நவிமும்பை போலீசார் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் கடும் கட்டுப்பாடுகளுடன் மார்க்கெட் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதாக மார்க்கெட் நிர்வாக அதிகாரி விஜய் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மார்க்கெட்டிற்குள் சரக்கு வரத்து 3 நாட்களும் மற்றும் விற்பனை 3 நாட்களும் சுழற்சி முறையில் செய்யப்படும் என்றார்.
லாரிகளுக்கு கட்டுப்பாடு
இதேபோல வெங்காயம், உருளைகிழக்கு மார்க்கெட்டின் நிர்வாக அதிகாரி அசோக் கூறுகையில், “லாரிகளில் பொருட்களை கொண்டு வருபவர்கள் கட்டாயம் பாஸ் பெற்று இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இங்கு பணிபுரியும் மாத்தாடி தொழிலாளர்களுக்கு வசதியாக தானே, கல்யாண், டோம்பிவிலி, மும்பை ஆகிய இடங்களில் இருந்து தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன” என்றார்.
மார்க்கெட்டின் உதவி நிர்வாக அதிகாரியான ஷிரீஷ் என்பவர் தெரிவிக்கையில், ஒரு வாரமாக மூடப்பட்ட காலத்தில் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருப்பதாகவும், மார்க்கெட் திறந்தவுடன் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், கூறினார்.
Related Tags :
Next Story