ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் - மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு லட்சுமண் சவதி கடிதம்


ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் - மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு லட்சுமண் சவதி கடிதம்
x
தினத்தந்தி 18 May 2020 5:15 AM IST (Updated: 18 May 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு, துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு, 

மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரிக்கு, கர்நாடக மாநில போக்குவரத்து துறையை நிர்வகித்து வரும் துணை முதல்-மந்திரி லட்சுமண் வதி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் 4 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 24 ஆயிரத்து 900 பஸ்கள் பொதுமக்களின் பயணத்திற்காக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் தினமும் 71 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கின்றன. தினமும் 98 லட்சம் பேர் இந்த பஸ்களில் பயணம் செய்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இருக்கைகளில் அமர...

இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்குதல், கடனை அடைத்தல் போன்ற பணிகளுக்கு நிதி இல்லாமல் தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.

பஸ்களில் உள்ள இருக்கைகளில் அமர அனுமதிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும். உடல்நலக்குறைவு இருப்பவர்களை பணிக்கு அனுமதிக்கக்கூடாது.

அனுமதிக்க வேண்டும்

அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி திரவம் வழங்க வேண்டும். அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அனைத்து பஸ்களையும் இயக்க அனுமதிக்க வேண்டும். அனைத்து வகையான வாடகை கார்கள், சரக்கு வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு லட்சுமண் சவதி தெரிவித்து உள்ளார்.

Next Story