கோவை மாவட்டத்தில், 10 இடங்களில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு - 400 பேரிடம் ரத்தம், சளி மாதிரி எடுத்தனர்
கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தனர். இதில் பரிசோதனைக்காக 400 பேரிடம் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
கோவை,
கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்து விட்டது. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 146 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 145 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கோவை உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிந்து கொள்ளவும், கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை அடைந்துள்ளதா என கண்டறியவும் 75 மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களின் சளி, ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்தது.
இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் கோவை வந்தனர். அவர்களுக்கு உதவியாக கோவை மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள், லேப் டெக்னீசியன், சுகாதார ஆய்வாளர்கள் என்று 10 பேர் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு, மேட்டுப்பாளையம், கோட்டூர், பெரியநாயக்கன்பாளையம், சிக்கதாசம்பாளையம் ஆகிய 5 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் ரத்தம், சளி மாதிரியை சேகரித்தனர்.
அதுபோன்று நேற்று 2-வது கட்டமாக கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, கோவை மாநகரத்தில் உள்ள குனியமுத்தூர், போத்தனூர், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பரிசோதனைக்காக சளி, ரத்த மாதிரியை சேகரித்தனர். அத்துடன் அவர்களிடம் கிருமி நாசினி முறையாக தெளிக்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர். பின்னர் அவர் கள் ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டு சென்றனர். இந்த ஆய்வின்போது கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான 10 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஒவ்வொரு பகுதிகளில் இருந்து 40 பேர்் என்று 10 இடங்களில் மொத்தம் 400 பேரிடம் இருந்து ரத்தம், சளி மாதிரிக்காக எடுக்கப்பட்டது. இந்த மாதிரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எடுக்கவில்லை. பாதிப்பு இருந்த இடங்களில் வசித்து வருபவர்களிடம் இருந்துதான் எடுக்கப்பட்டது. பின்னர் அவற்றை ஆய்வுக்காக சென்னைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆய்வு முடிவு அறிக்கை வந்த பின்னர்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்தவர்கள் அறிவிப்பார்கள்.
இந்த முடிவு பொதுமக்கள் யாருக்கும் தெரிவிக்கப்பட மாட்டது. அரசுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் கோவை வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story