போதிய விலை கிடைக்காததால் முள்ளங்கிகளை ஏரியில் கொட்டி சென்ற விவசாயிகள்


போதிய விலை கிடைக்காததால் முள்ளங்கிகளை ஏரியில் கொட்டி சென்ற விவசாயிகள்
x
தினத்தந்தி 18 May 2020 8:45 AM IST (Updated: 18 May 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த முள்ளங்கிகளை ஏரியில் வீசி சென்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. தர்மபுரியை சுற்றியுள்ள அன்னசாகரம், நல்லம்பள்ளி, தடங்கம், அதகப்பாடி, இண்டூர், கடகத்தூர், சோலைக்கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். தற்போது முள்ளங்கி விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் முள்ளங்கிக்கு போதிய விலை கிடைக்காததால் ஆங்காங்கே விவசாயிகள் முள்ளங்கிகளை ஏரிகளில் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி அன்னசாகரத்தையொட்டி உள்ள பகுதிகளில் முள்ளங்கி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு தர்மபுரி நகரை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் முள்ளங்கியை கொள்முதல் செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக முள்ளங்கி விலை குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.2-க்கு வியாபாரிகள் கேட்டதால் விவசாயிகள் முள்ளங்கியை விற்பனை செய்ய மறுத்து விட்டனர். போதிய விலை கிடைக்காததால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஏரியில் வீசினர்

இந்த நிலையில் நேற்று அதிகாலை முள்ளங்கி விலை வீழ்ச்சியால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்திருந்த முள்ளங்கிகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து இலக்கியம்பட்டி ஏரியில் கொட்டி சென்றனர். கூலிக்கு கூட கட்டுப்படி ஆகாததால் முள்ளங்கியை ஏரியில் கொட்டும் நிலைக்கு நாங்கள் வந்து விட்டோம் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதனிடையே தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ முள்ளங்கி ரூ.6 முதல் 8-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தர்மபுரி நகர பகுதியில் வியாபாரிகள் முள்ளங்கி ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்தனர். ஆனால் முள்ளங்கிகளை பொதுமக்கள் யாரும் வாங்கி செல்லவில்லை. இதனால் முள்ளங்கிகளை விற்பனைக்கு வாங்கி வந்த வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story