கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் வணிக வளாகங்களில் சப்-கலெக்டர் ஆய்வு
கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகங்கள் இருக்கின்றன. அந்த வணிக வளாகங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் நேற்று குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் கோத்தகிரி தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வணிக வளாகங்களில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க சப்-கலெக்டர் அனுமதி வழங்கினார். ஆனால் ஒவ்வொரு கடைக்கு முன்பும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகழுவவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் சப்-கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அனைத்து கடைகளையும் சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி பேரூராட்சி அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கு அவருக்கு, வியாபாரிகள் நன்றி கூறினர்.
அப்போது மார்க்கெட் நுழைவு வாயிலுக்கு வெளியே உள்ள ஒரு மளிகைக்கடையில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்று பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அதை பார்த்த சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், அங்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று உரிமையாளரை எச்சரித்தார்.
Related Tags :
Next Story