பரவலாக பெய்த கோடை மழையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ அபாயம் குறைந்தது - வனத்துறையினர் தகவல்


பரவலாக பெய்த கோடை மழையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ அபாயம் குறைந்தது - வனத்துறையினர் தகவல்
x
தினத்தந்தி 18 May 2020 3:45 AM IST (Updated: 18 May 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

பரவலாக பெய்த கோடை மழையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ அபாயம் குறைந்து விட்டது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இங்கு விலை உயர்ந்த மரங்களும், ஏராளமான வனவிலங்குகளும் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. அப்போது வனப்பகுதி பசுமையாக காட்சி அளிப்பதோடு, நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் என்பதால் வெயில் அதிகரிக்கிறது. அப்போது வனத்தில் புற்கள் கருகுவதோடு, நீர்நிலைகளும் வறண்டு விடுகிறது.

இதற்கிடையில் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக பல்வேறு சாலைகள் செல்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அப்போது வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், டிரைவர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் குரங்குகள், மான்களுக்கு உணவு அளிக்கின்றனர். அப்போது குப்பைகளை வீசி எறிகின்றனர். அதில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களும் அடங்கும். இதனால் கோடைகாலத்தில் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுகிறது. அதில் சிக்கி வனப்பகுதி நாசமாவதோடு, உயிரினங்களும் உயிரிழக்கின்றன. இதை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்பட பல்வேறு வழிகளை வனத்துறையினர் கையாள்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் காட்டுத்தீயை தடுக்க வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதோடு, சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்தது. மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர வாகன போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் சாலைகளிலும், அதன் ஓரங்களிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் தென்படுகிறது.

இது தவிர தினமும் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பி வருகிறது. மேலும் நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. சுற்றுலா பயணிகள் வருகை இல்லை, பரவலாக மழை போன்ற காரணங்களால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் இல்லை. கடந்த 2 மாதங்களாக காட்டுத்தீ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வறட்சியால் வனத்தில் காட்டுத்தீ பரவி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான வனம் கருகி விடும். நடப்பு ஆண்டில் தொடர் ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. மேலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது தவிர்க்கப்பட்டு உள்ளது. இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இல்லையெனில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தீயிடம் இருந்து வனத்தை பாதுகாக்க போராட வேண்டிய நிலை இருந்தது. அடுத்த சில நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டில் காட்டுத்தீயிடம் இருந்து வனம் தப்பி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story