சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 18 May 2020 9:14 AM IST (Updated: 18 May 2020 9:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா.

சேலம்,

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் எல்சிகா பானர்ஜி (வயது 28). இவர், பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்னை போலீசார் மீட்டு ஓமலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைத்திருந்தனர். ஆனால் அந்த இளம்பெண், தன்னுடன் தங்கியிருந்த மற்ற பெண்களின் தலைமுடிகளை அறுத்து ஆரவாரத்தில் ஈடுபட்டதாக கூறி காப்பகத்தின் நிர்வாகிகள் அந்த இளம்பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு சேர்த்தனர்.

நேற்று மதியம் எல்சிகா பானர்ஜி அரசு ஆஸ்பத்திரியில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், கழிப்பறைகள் சுத்தமாக இல்லை எனவும் கூறியும், அடிப்படை வசதிகள் செய்யக்கோரியும் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆஸ்பத்திரி டீன் மற்றும் கண்காணிப்பாளரை உடனடியாக சந்திக்க வேண்டுமென கூறி ஜன்னல் சிலாப் மீது அமர்ந்து கொண்டார். டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்தப் பெண் சமாதானம் ஆகவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு விசாரித்தனர். சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு எப்படி வந்தார்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் வட மாநில இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும், அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story