ராமேசுவரத்தில் மழை: பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை
வங்கக்கடலில் புயல் ஏற்பட்டதை தொடர்ந்து ராமேசுவரத்தில் மழை பெய்தது. பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
ராமேசுவரம்,
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. ‘உம்பன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வருகிற 20-ந்தேதி மேற்கு வங்கத்துக்கும், ஒடிசாவுக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பனில் உள்ள துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருந்த 1-ம் எண் புயல் கூண்டானது நேற்று இறக்கப்பட்டு, 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அதனால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய ஊர்களில் நேற்று பெரும்பாலான நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. புயல் சின்னத்தை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு மழைநீர் தேங்கி நின்றது.
Related Tags :
Next Story