உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 9 வகையான பண்ணை எந்திரங்கள் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 9 வகையான பண்ணை எந்திரங்கள் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 18 May 2020 6:03 AM GMT (Updated: 18 May 2020 6:03 AM GMT)

வேளாண்மைத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 9 வகையான பண்ணை எந்திரங்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் பயனாளிகளுக்கு பண்ணை எந்திரங்கள் வழங்கி பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தும் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் கடந்த 2017-18-ம் ஆண்டு 58 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்களுக்கு ரூ.2 கோடியே 90 லட்சம் நிதியில் 175 பண்ணை எந்திரங்கள் வாங்கப்பட்டது. அதேபோல் 2018-19-ம் ஆண்டு 52 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசின் தொகுப்பு நிதி ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 135 பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 52 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்களுக்கு அரசு தொகுப்பு நிதியாக ரூ.2 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், களையெடுக்கும் கருவி போன்ற 9 வகையான பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், வேளாண்மை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை அலுவலர்கள் பரமேஸ்வரன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story