குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.16.76 கோடியில் 46 பணிகள் - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.16.76 கோடியில் 46 பணிகளை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.16.76 கோடி செலவில் 46 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
நெல்லை அருகே உள்ள மேலக்கல்லூர் குளம், நீர்வரத்து, மறுகால் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை கலெக்டர் ஷில்பா நேற்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 2020-ம் ஆண்டுக்கு நெல்லை மாவட்டத்துக்கு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 46 பணிகள் மேற்கொள்ள ரூ.16 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளார். இதன்மூலம் 23,121 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய பயன்பெறும் வகையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பணிகளை சிறப்பாக செய்ய ஒவ்வொரு பணிகளும் அந்தந்த பகுதி பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் சபை விவசாயிகளின் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளை முதலில் சரிசெய்து விட்டு பணிகளை தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் பணிகள் சிறப்பாக நடைபெற முதல்கட்டமாக விவசாய குழுக்களிடம் வங்கி கணக்கு மற்றும் குழு அமைப்பு தொடர்பாக அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கி அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு மேற்கொண்ட குடிமராமத்து பணிகள் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள் தண்ணீர் நிரம்பி பாசனம் செய்து சாகுபடி செழிப்பாக அமைகிறது. இந்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கு நெல்லை மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவி பொறியாளர் ரமேஷ்குமார் மற்றும் மேலக்கல்லூர் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story