வாடகை கார்களில் சமூக இடைவெளியை பின்பற்ற புதிய வசதி
வாடகை கார்களில் உட்காருபவர்கள் ஒருவரையொருவர் தொடாமல் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக புதிய வசதிகள் செய்யப்படுகின்றன.
கோவை,
ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வாடகை கார்கள் ஓடவில்லை. இதனால் அதன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாடகை கார்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் அனுமதிக்காததற்கு காரணம், அதில் உட்காருபவர்களுக்கிடையே சமூக இடைவெளி இருக்காது என்பதற்காகத்தான். இதையடுத்து காரில் உட்கார்பவர்கள் இடையே சமூக இடைவெளி ஏற்படுத்த புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கார்களுக்கு உள் அலங்காரம் செய்துதரும் நிறுவனம் நடத்திவரும் வரும் பிலால் என்பவர் கூறியதாவது:-
வாடகை கார்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், ஒருவரையொருவர் தொடாதவாறு உட்காரும் வகையிலும் காரின் உள்பகுதியை நான்கு பாகங்களாக டிரான்ஸ்பரன்ட் மைக்கா ஷீட் மூலம் பிரிக்கலாம். அதன்படி காரின் முன் இருக்கைக்கும், பின் இருக்கைக்கும் இடையில் இந்த மைக்கா ஷீட் பொருத்தப்படும். அதன்பின்னர் காரின் டிரைவருக்கும், முன் இருக்கையில் உட்காருபவருக்கும் இடையிலும், பின் இருக்கையில் உட்காரும் 2 பேர் அல்லது 3 பேர் இடையிலும் மைக்கா ஷீட் பொருத்தப்படும்.
பயணிகளுக்கு பயம் இருக்காது
இதன் மூலம் காரில் உட்கார்ந்திருப்பவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளலாமே தவிர தொட முடியாது. காரில் ஏறும் போதும், இறங்கும்போதும் கிருமி நாசினி கொண்டு கையை துடைத்துக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காரின் ஜன்னலை திறந்து வைத்தால் நான்கு பேருக்கும் காற்று கிடைக்கும். காருக்குள் இந்த மாற்றங்களை செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை செலவாகும். கோவையில் இதுவரை 2 கார்களில் இதுபோன்ற மாற்றங்களை செய்துள்ளோம். ஒருவரையொருவர் தொடாதவாறு செய்யப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களின் மூலம் பயணிகள் எந்த பயமும் இல்லாமல் வாடகை கார்களில் பயணம் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story