தஞ்சையில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் 608 பேர் ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு பயணம் மேற்குவங்காளத்தை சேர்ந்த 87 பேர் பஸ்களில் புறப்பட்டனர்


தஞ்சையில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் 608 பேர் ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு பயணம் மேற்குவங்காளத்தை சேர்ந்த 87 பேர் பஸ்களில் புறப்பட்டனர்
x
தினத்தந்தி 19 May 2020 4:01 AM IST (Updated: 19 May 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் 608 பேர் உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர். மேற்குவங்காளத்தை சேர்ந்த 87 பேர் பஸ்சில் புறப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் 608 பேர் உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர். மேற்குவங்காளத்தை சேர்ந்த 87 பேர் பஸ்சில் புறப்பட்டனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கினால் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தஞ்சை மாவட்டத்தில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அந்தந்த பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் தங்க வைத்து, தன்னார்வலர்கள் மூலம் உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர்.

கரும்பு வெட்டும் தொழில், கட்டுமான தொழில் செய்வதற்காக இவர்கள் வந்தனர். அவ்வாறு தங்கியுள்ள தொழிலாளர்கள் 2,300-க்கும் மேற்பட்டவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர். அவ்வாறு விருப்பம் தெரிவித்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 113 தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பஸ்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரெயிலில் பயணம்

இந்த நிலையில் நேற்று தஞ்சையில் இருந்து ரெயில் மூலம் 608 தொழிலாளர்கள் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 285 தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 106 பேரும், நாகை மாவட்டத்தில் இருந்து 217 பேரும் அழைத்து வரப்பட்டனர்.

முன்னதாக இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. தஞ்சை ரெயில் நிலையத்திலும் இவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தஞ்சையில் இருந்து நேற்று இரவு 7 மணிக்கு ரெயில் புறப்பட்டது.

மேற்கு வங்காளம்

இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வழியனுப்பி வைத்தார். அப்போது டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் வேலுமணி (தஞ்சை), வீராசாமி (கும்பகோணம்), தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதே போல் தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 87 தொழிலாளர்கள் 3 பஸ்களில் அவர்களின் சொந்த ஊருக்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

கலெக்டர் பேட்டி

முன்னதாக நேற்று காலை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 608 பேர் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாளை (இன்று) பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 66 பேர் வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.

வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையும் மீறி யாராவது வந்திருந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அரசு ஊழியர்கள் செல்வதற்காக 20 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்குள் செல்வதற்கு அனுமதிச்சீட்டு தேவை இல்லை. வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு கண்டிப்பாக அனுமதிச்சீட்டு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story