சென்னை போலீசில் கொரோனா பாதித்த சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து பணிக்கு திரும்பினார் - கமிஷனர் நேரில் சென்று வரவேற்றார்
சென்னை போலீசில் முதன் முதலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று அவரை வரவேற்றார்.
சென்னை,
சென்னை காவல்துறையை தினமும் தாக்குதல் நடத்தி பயமுறுத்தி வருகிறது கொரோனா. ஒரு பக்கம் தாக்குதலால் பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் குணமடைந்தும் வருகின்றனர். 3 உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 200 பேர் நேற்று மாலை வரை கொரோனா தொற்றால் சென்னை போலிசில் தாக்கப்பட்டனர். நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுப்பிரிவு டி.எஸ்.பி. ஒருவருக்கு கொரோனா உறுதியானது. நேற்று ஒரே நாளில் சென்னை போலீசில் 15 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள்.
கமிஷனர் வரவேற்றார்
சென்னை போலீசில் முதன் முதலில் கொரோனாவால் தாக்கப்பட்ட எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் ரோந்து பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், 28 நாட்கள் சிகிச்சை முடிந்து குணமான நிலையில் நேற்று காலை பணிக்கு திரும்பினார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வரவேற்றார். அவருக்கு மேள தாளம் முழங்க போலீஸ் நிலையத்தில் சக போலீசார் வரவேற்பு அளித்தனர். தனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதால், நலமுடன் பணிக்கு வந்துள்ளதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதேபோல, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட போலீஸ் துறையைச் சார்ந்த அனைவரும் நலமுடன் பணிக்கு திரும்புவார்கள் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.
Related Tags :
Next Story