இலவச சாப்பாடு வழங்குவது நிறுத்தம்: அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிப்பு
இலவச சாப்பாடு வழங்குவது நிறுத்தப்பட்டு அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் ஏழை, எளியோருக்கு வயிறார உணவு கொடுக்கும் தளமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட சமயத்தில் அம்மா உணவகம் மூலம் அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்களும் இலவசமாக உணவளிக்க முன்வந்தனர். நிதி உதவியும் குவிந்தன.
இதையடுத்து அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்றும், அதற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து வசூலித்து வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நேற்று முதல் கட்டணம் வசூலித்து தான் உணவு வழங்க வேண்டும் என்று அந்தந்த பொறுப்பாளர்கள் மூலம் அம்மா உணவக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்பட்டு நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடங்கியது. நிலைமை சீரடையும் வரையிலோ அல்லது இந்த மாதம் முடியும் வரையிலோ இலவச உணவு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story