செங்கல் உற்பத்தி தொடங்கியது காரமடை பகுதியில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி


செங்கல் உற்பத்தி தொடங்கியது  காரமடை பகுதியில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 May 2020 4:45 AM IST (Updated: 19 May 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

காரமடை பகுதியில் செங்கல் உற்பத்தி தொடங்கியதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை, கணுவாபாளையம், தாயனூர், புஜங்கனூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்கு செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளதால், காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்து செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளது.

மகிழ்ச்சி

ஆர்டரின் பேரில் மட்டுமே இங்கு செங்கல் உற்பத்தி செய்யப்பட்டு, பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது போதிய ஆர்டர் இல்லாத காரணத்தாலும், கொரோனா வைரசுக்கு பயந்து தொழிலாளிகளில் சிலர் வேலைக்கு வர தயக்கம் காட்டுவதாலும் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே செங்கல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்கள் கூறும்போது, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நாங்கள் வேலை இல்லாமல் அவதியடைந்து வந்தோம். இதனால் உணவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தற்போது செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளதால், மகிழ்ச்சியாக இருக்கிறது. வருமானத்துக்கும் கவலை இல்லை. ஆனாலும் சிலர் கொரோனா வைரசுக்கு பயந்து வேலைக்கு செல்லாமல் உள்ளனர். எனவே இதுபோன்று வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

இது குறித்து செங்கல் சூளை நடத்தி வருபவர்கள் கூறியதாவது:-

70 ஆயிரம் செங்கல்கள்

காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சூளைகள் மூலம் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஊட்டி, கோத்தகரி, கூடலூர், மஞ்சூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள், திருப்பூர், அவினாசி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தற்போது நீண்ட நாளுக்கு பிறகு செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளது. இங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தபடி வேலை செய்து வருகிறார்கள். செங்கல் உற்பத்திக்கு தேவையான மண், விறகு அனைத்தும் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் ஆர்டர்தான் குறைவாக இருக்கிறது. இதனால் தினமும் 70 ஆயிரம் செங்கல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த பாதிப்பு சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story