விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துக்கு பதில் மானியம்; கவர்னர் அறிவுறுத்தல்


விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துக்கு பதில் மானியம்; கவர்னர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 May 2020 11:29 PM GMT (Updated: 18 May 2020 11:29 PM GMT)

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நிறுத்தி நேரடியாக மானியத்தை வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடி கருத்து பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் வரையே கடன் பெற முடியும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் கடன் வாங்கும் சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடன் வாங்கும் சதவீதத்தை 5 ஆக மத்திய அரசு உயர்த்தியது.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கடன் வாங்கும் உச்சவரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் 3.5 சதவீதம் வரை மட்டுமே நிபந்தனையற்றது. மீதமுள்ள 1½ சதவீதம் பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்தி நேரடியாக மானியத்தை வழங்குவது, மின் இழப்பை குறைத்து மின்சாரத்தை விற்பதற்கும், வாங்குவதற்கும் உள்ள இடைவெளியை குறைத்தல், சொத்து வரியை சீர்திருத்துதல் மற்றும் குடிநீர், கழிவுநீர் இணைப்பிற்கு கட்டணங்களை சீர்திருத்துதல், ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு போன்ற திட்டங்களை மேற்கொள்ள நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து முடிவு எடுப்பவர்களுக்கு சரியான ஆலோசனைகளை கூற வேண்டும். கோப்புகளில் பதிவு செய்வதற்கான பொறுப்பு அதிகாரிகளிடம் உள்ளது. எனவே உங்கள் பொறுப்புகளை மனசாட்சியுடன் நிறைவேற்றுங்கள். இப்போது ஒவ்வொரு ரூபாயும் எண்ணப்படுகிறது. எங்கெல்லாம் வருவாயை உயர்த்த முடியுமோ அங்கெல்லாம் வருவாயை உயர்த்துங்கள்.

மதுபான கடையை ஏலம் விடுவது, கேபிள் டி.வி. வரியை முறையாக வசூலிப்பது, நிலுவை சொத்து வரி, மின் கட்டணம், வணிக வரி உள்ளிட்டவைகளில் சிறந்த நிதி நிர்வாகம் செய்வதன் மூலம் வருவாய் அதிகம் கிடைக்கும். மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியமும், சம்பளமும் கிடைக்கச் செய்ய வேண்டும். இனிமேல் நாம் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவிலும் மிகுந்த கவனம் இருக்க வேண்டும். 

அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிற செலவினங்கள் கையில் பணம் இருக்கும் போது மேற்கொள்ளப்படும். கடன் பெறுவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதற்கு கவர்னரும் நியாயத்தின் அடிப்படையில் தான் பரிந்துரைக்க வேண்டும். ஊரடங்கின் காரணமாக வருவாய் சரிந்துள்ளதை கருத்தில் கொண்டு தான் கடன் வாங்குவது இருக்க வேண்டும். அதன் மூலம் பொருளாதாரத்தை மீட்கவும், சேமிக்கவும், உருவாக்கவும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story