ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு: குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு: குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 May 2020 5:09 AM IST (Updated: 19 May 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருவாரூர், 

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளாக காலம் கடந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் வருகிற ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்து விட்டோம். இந்நிலையில் நடப்பாண்டு ஜூன் 12-ந்்தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்-அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

குறுவை தொகுப்பு திட்டம்

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி மாதாந்திர அடிப்படையில் கர்நாடகா, தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்பிட வேண்டும். விதை, உரம் உள்ளிட்ட இடுப் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும். கொரோனா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சாகுபடி பணிகளில் ஊக்கப்படுத்த குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். கூட்டுறவு கடன் நிலுவையை தள்ளுப்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story