கர்நாடகத்தில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்தக்கூடாது - சித்தராமையா எதிர்ப்பு
கர்நாடகத்தில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்த சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா வைரசை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தியதால், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து தொழிலாளர்கள் தவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு எடுத்துள்ள முடிவு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு உதவுவது என்பது தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது என்று அர்த்தம் அல்ல. நிறுவனங்களின் முதலாளிகளை மட்டுமல்ல, தொழி லாளர்களின் நலனை காப்பது அரசின் கடமை.
ஆலோசிக்க வேண்டும்
தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு முன்பு, தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசிக்க வேண்டும். சட்டசபை கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு அவசரகதியில் சட்டத்தை திருத்த முயற்சி செய்வது, அதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.”
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story