குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின முககவசம் அணிந்து பணிபுரிந்தனர்


குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின முககவசம் அணிந்து பணிபுரிந்தனர்
x
தினத்தந்தி 19 May 2020 6:18 AM IST (Updated: 19 May 2020 6:18 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. ஊழியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்தனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. ஊழியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்தனர்.

33 சதவீத பணியாளர்கள்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் அத்தியாவசிய பணிகளை கவனிக்கும் பொருட்டு பெரும்பாலான அலுவலகங்கள் இயங்கி வந்தன.

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு குறித்து கடந்த 3-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில் அரசு அலுவலகங்களில் அதிகபட்சமாக 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதனால் 3-ல் ஒரு பகுதியினர் மட்டுமே அரசு அலுவலகங்களில் பணியாற்றி வந்தார்கள்.

புதிய உத்தரவு

இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும், வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் கருவூலத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற பெரும்பாலான துறைகள் அத்தியாவசிய பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கின.

முழுமையாக செயல்பட்டன

இந்த துறைகளில் நேற்று 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால் மேற்கண்ட துறைகளின் அலுவலகங்களில் நேற்று அதிக பணியாளர்கள் பணியாற்றியதை காண முடிந்தது. அவர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். அதேநேரத்தில் கல்வித்துறை, சுற்றுலாத்துறை, கதர் வாரியம், பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, கைத்தறித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை போன்ற அரசுத்துறைகள் மட்டுமே கொரோனாவின் காரணமாக மூடப்பட்டு இருந்தன.

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனைத்து துறை அலுவலகங்களும் நேற்று முழுமையாக செயல்பட்டன. சில துறைகள் மட்டும் இயங்கவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரவர்களின் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பணிக்கு வந்து, திரும்பினர்.

கல்வித்துறை

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்ட போது, குமரி மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலகங்களுக்கும் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான துறை அலுவலகங்கள், அதாவது சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை போன்றவை குமரி மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளை கவனிக்கும் பொருட்டு செயல்பட்டன. ஊரடங்கால் செயல்படாத துறைகள் மிகவும் குறைவு. கல்வித்துறை பள்ளிகள் திறக்காததால் அவர்கள் வரவில்லை.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் போன்ற சில துறைகள் மட்டும் இயங்காமல் இருந்தன. அதிலும் பொதுப்பணித்துறை வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. மற்ற துறையினரும் பணிகளை தொடங்க அனுமதி கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். ஊரடங்கின் காரணமாக அனுமதி கொடுக்கவில்லை என்றார்.

Next Story