குமரியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
5 பேர் வீடு திரும்பினர்
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 25 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஒரு பெண் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 5 வயது பெண் குழந்தை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் முழுமையாக குணம் அடைந்து நேற்று அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். அதாவது நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த 26 வயது வாலிபர், தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், கல்லுக்கூட்டத்தைச் சேர்ந்த 55 வயது ஆண், விரிகோடு பகுதியைச் சேர்ந்த ஆண், நாகர்கோவில் அருகே சுங்காங்கடைக்கு வந்திருந்த சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் என 5 பேரும் நேற்று கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பழங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.
வெளிநாட்டு வாலிபர்
இந்தநிலையில் நேற்றும் 3 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கேரளா வழியாக வந்த மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபர் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு, களியக்காவிளை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.இதேபோல நாகர்கோவில் அருகே உள்ள மேலபுத்தேரியைச் சேர்ந்த கணவன் மனைவி 3 வயது குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் 3 பேருக்கும் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
கணவன், மனைவி
அவர்களில் 37 வயது கணவருக்கும், 25 வயது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று தொற்று கண்டறியப்பட்ட 3 பேரின் விவரம் அரசின் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் உயரவில்லை. வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரி மாவட்டத்தில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
3 ஆயிரம் கருவிகள்
கொரோனா பரிசோதனைக்குரிய 3 ஆயிரம் கருவி கள் சென்னையில் இருந்து நேற்று குமரி மாவட்டம் வந்தன. அவற்றில் 2 ஆயிரம் கருவிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், ஆயிரம் கருவிகள் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story