50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின
நாமக்கல் மாவட்டத்தில் அரசின் உத்தரவுபடி நேற்று 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின.
நாமக்கல்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே இயங்கி வந்தன.
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தொடங்கின.
ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. பெரும்பாலான அலுவலகங்களில் முக கவசத்துடன் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்பட்டது.
இருப்பினும் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
Related Tags :
Next Story