நாகர்கோவில் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
நாகர்கோவில் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து நடந்தது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
ஈத்தாமொழி,
நாகர்கோவில் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து நடந்தது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
தும்பு ஆலை
நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழியை அடுத்த இலந்தையடித்தட்டில் தும்பு ஆலை உள்ளது. இதை மணிக்கட்டி பொட்டல், மேலராமபுரம் பகுதியை சேர்ந்த மயூர் குமார் நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் வழக்கமாக 15 தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். நேற்று 7 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். அவர்கள் மதியம் சாப்பிட சென்றனர்.
தீ விபத்து
இந்த ஆலையின் குடோனில் ஏராளமான கயிறுகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. பிற்பகல் 3 மணி அளவில் அந்த குடோனில் பயங்கர சத்தத்துடன் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மற்ற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. இதை பார்த்ததும், அங்கிருந்த தொழிலாளர்கள் உடனே ஆலையின் உரிமையாளர் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ ஆலை முழுவதும் பரவியது, அங்கிருந்து கரும்புகையாக கிளம்பியது.
4 வண்டிகள்
இதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு வண்டிகள் தவிர குளச்சலில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. தீயை அணைக்கும் பணியில் 4 வண்டிகள் ஈடுபட்டன. இதுதவிர வெளியில் இருந்தும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடந்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால், தீ மேலும் பரவியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இதனால் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. ஆனாலும் ஆலை கட்டிடங்களும் சேதம்அடைந்ததால், பல லட்சம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தீ விபத்து நடப்பதற்கு முன் அந்த பகுதியில் இடியுடன், மின்னல் தாக்கியதாகவும், அதைத்தொடர்ந்து குடோனில் தீ விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
காயமின்றி தப்பினர்
தீ விபத்து நடப்பதற்கு முன் ஆலையில் வேலை செய்த தொழிலாளர்கள் சாப்பிடுவதற்காக வெளியே வந்ததால், அவர்கள் காயமின்றி தப்பினார்கள்.
சம்பவ இடத்துக்கு ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப் மற்றும் போலீசாரும் விரைந்து சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story