சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் பரபரப்பு காசி மீது மேலும் புகார் கொடுப்பதை தடுக்க முயற்சியா? போலீஸ் விசாரணை
சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசி மீது மேலும் புகார் கொடுப்பதை தடுக்க முயற்சியாக வெளியிடப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசி மீது மேலும் புகார் கொடுப்பதை தடுக்க முயற்சியாக வெளியிடப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணம் பறிப்பு
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் பல பெண்களுடன் பழகி, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்தார். இதைத் தொடர்ந்து காசியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜினீயர் மற்றும் சிறுமி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து காசியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கந்து வட்டி புகாரும் கூறப்பட்டதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது காசியின் நெருங்கிய நண்பர்கள் 2 பேர், காசி பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். வெளி நாட்டில் இருக்கும் மற்றொரு நண்பரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆபாச படங்கள்
காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப் டாப்பில் முக்கிய பிரமுகர்களின் மனைவியுடன் காசி எடுத்த வீடியோ படங்கள் இருந்தன. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காசி, இளம் பெண்ணுடன் ஆடையே இல்லாமல் இருக்கும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. குறிப்பாக வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. இந்த வீடியோக்கள் எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு இளம்பெண் ஆடையே இல்லாமல் இருக்கும் படியான வீடியோவும் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த வீடியோவில் அந்த பெண் மட்டுமே தெரிகிறார். காசி தெரியவில்லை. இது அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோ போல் தெரிகிறது. மேலும் ஒரு சில புகைப்படங்களில் இளம் பெண்ணின் முகம் மட்டும் தெரிகிறது. வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வாறு ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிட்டது யார்? என்று தெரியவில்லை.
தடுக்கும் முயற்சி
காசியின் மீது தற்போது மேலும் பல பெண்கள் புகார் அளிக்க முன் வந்து உள்ளனர். அவர்கள் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தால் புகார் அளிப்போம் என்று கூறுகிறார்கள்.
இந்தநிலையில் ஆபாச படம் வெளியாகி இருப்பது, காசி மீது புதிதாக புகார் கொடுக்க வருபவர்களை தடுக்கும் முயற்சியாக வெளியிடப்பட்டு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஆபாச படங்கள் வெளியாகி வருவதால் பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
எச்சரிக்கை
காசி தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் வீடியோக்கள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story