விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயக்கிய 20 ஆட்டோக்கள் பறிமுதல்


விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயக்கிய 20 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 May 2020 7:37 AM IST (Updated: 19 May 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 20 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில் 3-வது கட்ட ஊரடங்கு நேற்று முன்தினத்துடன் முடிவடைவதாக இருந்த நிலையில் இம்மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் 4-வது கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை விழுப்புரம் மாவட்ட மக்கள் கடைபிடிக்கிறார்களா? என்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம் நகரில் இந்த ஊரடங்கு முறையாக கடை பிடிக்கப்படுகிறதா? என்றும் அத்தியாவசிய தேவையை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் வாகனங்களில் சுற்றுகிறார்களா? என்று நேற்று காலை விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது நகரில் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையை தவிர மற்ற தேவைகளுக்காக சில ஆட்டோக்கள் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட 20 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு அதன் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள மார்க்கெட் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் நின்றுகொண்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், ஒருமுறை வீட்டை விட்டு வெளியே கடைகளுக்கு வந்தால் 4, 5 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கிச்செல்லும்படியும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதாக பொய் சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிய வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவுரை கூறினர்.

Next Story