தேசிய வேளாண் சந்தை மூலம் 6 டன் சூரியகாந்தி விதை விற்பனை ஊரடங்கில் கை கொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தேசிய வேளாண் சந்தை மூலம் 6 டன் சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நேரத்திலும் சூரிய காந்தி விதை விற்பனை நடைபெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போடிப்பட்டி,
உடுமலையை அடுத்த கணபதிபாளையம், சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி பகுதிகளில் அதிக அளவில் சூரியகாந்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போதைய ஊரடங்கு சூழலில் சூரியகாந்தி அறுவடை தொடங்கியதால் விவசாயிகள் மனதில் பலவிதமான அச்ச உணர்வுகள் தோன்றியது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அறுவடைப்பணிகள் மேற்கொள்வதற்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஆனாலும் அறுவடை எந்திரங்கள் உதவியுடன் அறுவடை செய்து முடித்தனர்.
பின்னர் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள உலர்களங்களில் சூரிய காந்தி விதைகளை காய வைத்து,மருந்து தெளிப்பானைப்பயன்படுத்தி சுத்தம் செய்து விற்பனைக்கு தயார்படுத்தினர். அதன் பிறகே விவசாயிகளுக்கான முக்கிய சவால் காத்திருந்தது. விவசாயப்பணிகளுக்கு ஊரடங்கிலிருந்து பலவிதமான சலுகைகளை அரசு வழங்கியிருந்தபோதிலும் தற்போதைய நெருக்கடியான சூழலில் விளைபொருட்களை விற்பனை செய்வது விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.
ஒரு கிலோ ரூ.33
பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் விளைபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் தயக்கம் காட்டி வருவதே இதற்குக் காரணமாகும். இந்த நிலையில் விவசாயிகளுக்கு சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்வதற்கு தேசிய வேளாண் சந்தை திட்டம் கைகொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தற்போதைய சூழலில் வெளியிலிருந்து வியாபாரிகள் வந்து சூரியகாந்தி விதைகளை வாங்குவதற்கு தயாராக இல்லை. இதனால் செய்வதறியாது தவித்த நிலையில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் ஆலோசனை கூறினர். அதன்படி தேசிய வேளாண் சந்தை மூலம் ஒரு கிலோ ரூ.33 என்ற விலையில் விற்பனை செய்துள்ளோம். உடனடியாக எங்களது வங்கிக்கணக்கில் பணமும் வரவு வைக்கப்பட்டு விட்டது மகிழ்ச்சி தருவதாக உள்ளது இவ்வாறு அவர் கூறினர்.
மாதிரிகள் ஆய்வு
மேலும் இதுகுறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:-
தேசிய வேளாண் சந்தை மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தற்போது உடுமலை பகுதியில் விளைந்த சூரியகாந்தி விதைகள் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு ஒவ்வொரு குவியலிலிருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வின்மூலம் ஈரப்பதம்,கலவன்,எண்ணெய் சத்து போன்ற விபரங்கள் எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்துள்ளனர். அதன்படி ஒரு கிலோ ரூ.33 என்ற விலையில் 6 டன் சூரியகாந்தி விதைகள் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story