50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின; சிறப்பு பஸ்களில் பணிக்கு வந்தனர்


50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின; சிறப்பு பஸ்களில் பணிக்கு வந்தனர்
x
தினத்தந்தி 19 May 2020 2:33 AM GMT (Updated: 19 May 2020 2:33 AM GMT)

50 சதவீத ஊழியர்களுடன் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கின. இதற்காக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் ஊழியர்கள் பணிக்கு வந்து சென்றனர்.

விழுப்புரம், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே 3-வது கட்ட ஊரடங்கு கடந்த 17-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது இம்மாதம் 31-ந் தேதி வரை 4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கால் குறைந்த எண்ணிக்கை ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில் மே 18-ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க தொடங்கியது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அங்குள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி பிரிவு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, ஆதிதிராவிடர் நலப் பிரிவு, நில அளவைப்பிரிவு, சமூக நலத்துறை, சத்துணவுத்துறை உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் இயங்க தொடங்கின.

ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணிநாட்களாக முறைப்படுத்தப்பட்டு அதன்படி வழக்கமான பணி நேரத்தை பின்பற்றி அலுவலகங்கள் இயங்கின.

மேலும் அரசு ஊழியர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் முதல் பிரிவினரும், புதன், வியாழக்கிழமைகளில் 2-ம் பிரிவினரும், வெள்ளி, சனிக்கிழமைகளில் முதல் பிரிவினரும், அடுத்த வாரத்தின் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 2-ம் பிரிவினரும், புதன், வியாழக்கிழமைளில் முதலாம் பிரிவினரும், வெள்ளி, சனிக்கிழமைகளில் 2-ம் பிரிவினரும் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி தாங்கள் பணியாற்றும் அலுவலகத்திற்கு வந்தனர். அலுவலக நுழைவுவாயில் அருகில் கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் கைகளை நன்கு கழுவிய பிறகே அலுவலகத்திற்குள் சென்றனர். பின்னர் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வழக்கமான அரசு பணியை மேற்கொண்டனர்.

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கருவூலம், வனத்துறை அலுவலகம், வட்டார போக்கு வரத்து அலுவலகம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அரசு அலுவலகங்களும் நேற்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க தொடங்கியுள்ளது.

அரசு அதிகாரிகள், ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருவதற்கு வசதியாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அரசு அலுவலகங்கள் பாதி எண்ணிக்கை ஊழியர்களுடன் இயங்க தொடங்கினாலும் ஊழியர்களின் சில இருக்கைகள் காலியாகவே கிடந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அரசு அலுவலகங்கள் சற்று வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டது. பின்னர் மாலையில் பணி முடிந்ததும் அரசு ஊழியர்கள் மீண்டும் சிறப்பு பஸ்கள் மூலம் தங்களது ஊருக்கு திரும்பி சென்றனர்.

Next Story