தடுப்பு வேலியை அகற்றக்கோரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டம்
தனிமைப்படுத்தப்பட்ட தெருவில் குடியிருந்து வரும் மக்கள் அங்குள்ள தடுப்பு வேலியை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரை பெத்தானியாபுரம் பகத்சிங் தெருவில் 4 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அந்த தெருவை அரசு அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். அந்த தெருவிற்குள் பொதுமக்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்பு வேலி அமைத்தனர்.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அந்த குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அந்த சிறுமி மட்டும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்ததும், கடைசியில் அந்த சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.
போராட்டம்
இந்தநிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகத்சிங் தெரு மக்கள் தங்களின் தனிமைப்படுத்தலை விலக்கக்கோரி நேற்று வீடுகளை விட்டு வெளியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்த பகுதிக்கு வந்த கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோலைராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபரின் வீட்டை மட்டும் தனிமைப்படுத்தவும், பொதுமக்களை விடுவிக்கவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் தடுப்பு வேலியை விலக்கி பொதுமக்களை விடுவித்தனர்.
Related Tags :
Next Story