டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம் பெண்கள் உள்பட 19 பேர் கைது


டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம்  பெண்கள் உள்பட 19 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2020 8:59 AM IST (Updated: 19 May 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து கடைகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மதுரை பொன்னகரம் கிராஸ்ரோடு பகுதியில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அந்த பகுதி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் கொரோனா வந்ததால் அரசு அறிவிப்பின் படி மதுக்கடைகள் மூடப்பட்டன. எனவே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது பொன்னகரம் கிராஸ்ரோட்டில் செயல்பட்ட கடையும் திறக்கப்பட்டது. அதற்கு அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

19 பேர் கைது

போராட்டத்தின் போது அவர்கள் கடையில் இருந்த விற்பனையாளர்களை வெளியேற்றி விட்டு கடையை பூட்டினர். பின்னர் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் கடையை வேறு இடத்திற்கு மாற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதற்கிடையில் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடை திறக்கப்பட்டது.

Next Story