சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து; கலெக்டர் அறிவிப்பு
மாவட்டத்தில் நடந்த சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 13 ஊராட்சி ஒன்றியம், 2 நகராட்சி பகுதிகளில் காலியாக இருந்த 108 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 145 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 9.7.2018 அன்று கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்தனர்.
பின்னர் அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேர்காணல் நடத்தியும், காலி பணியிடங்களை இது வரை நிரப்ப முடியவில்லை. இந்நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபடி சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிர்வாக காரணங்களுக்காக இது வரை நிரப்பப்படவில்லை. இதனால் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்பதால், இது தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது. மேலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்களை பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிப்பு பின்னர் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு கலெக்டர் கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story