அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் முட்செடிகள்- ஆகாயத்தாமரைகள் மழைக்காலத்திற்கு முன்பே அகற்ற விவசாயிகள் கோரிக்கை
அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் முட்செடிகள், ஆகாயத்தாமரைகளை மழைக்காலத்திற்கு முன்பே அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் முட்செடிகள், ஆகாயத்தாமரைகளை மழைக்காலத்திற்கு முன்பே அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி ஆறு
கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவையையும், குடிநீர் தேவையையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு. திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது, வாங்கல் பகுதிக்கு உட்பட்ட திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.
கோரிக்கை
இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமராவதி ஆற்றில் தற்போது முட்செடிகள் மண்டியும், ஆகாயத்தாமரை முளைத்தும், ஆறு தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால், மழைக்காலம் தொடங்கும் முன்பே ஆற்றின் மையப்பகுதிகளில் உள்ள முட்செடிகளையும், ஆகாயத்தாமரைகளையும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சரியான பராமரிப்பு இல்லாததால், கரூர் அமராவதி ஆற்றில் பல இடங்களில் முட்செடிகளும், ஆகாயத்தாமரைகளும் முளைத்து தண்ணீர் செல்ல முடியாத வகையில் அடைத்துக்கொண்டு உள்ளன. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, விரைவாக முட்செடிகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மழைக்காலங்களில் தண்ணீர் கடைமடை வரை சென்று சேரும். இல்லாவிட்டால் ஆற்றில் தண்ணீர் திறந்தாலும், கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் பாடு திண்டாட்டமாகி விடும், என்றனர்.
Related Tags :
Next Story