மாவட்டத்தில், பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை வீடுகள் சேதம்- மரங்கள் சாய்ந்தன


மாவட்டத்தில், பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை வீடுகள் சேதம்- மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 19 May 2020 10:24 AM IST (Updated: 19 May 2020 10:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்தன.

தரகம்பட்டி, 

கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்தன.

பலத்த மழை

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தரகம்பட்டி, கடவூர், தேவர்மலை, பாலவிடுதி, மலைப்பட்டி, மாவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த ஏரி, குளங்கள் பாதி கொள்ளளவு நிரம்பின. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தரகம்பட்டி அரு கே தேவர்மலை ஊராட்சி குடிவண்டையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குமாரசாமி, வேலுச்சாமி, வெங்கிடுசாமி ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்மலை கிராமநிர்வாக அலுவலர் முத்துச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மரங்கள் சாய்ந்தன

இதேபோல் கரூர் நகரப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான வாங்கல், நெரூர், மண்மங்கலம், தாந்தோணிமலை, வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது சில இடங்களில் பலத்த காற்றும் வீசியதால் தாந்தோணிமலை, காந்திகிராமம், ராயனூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.

கரூரில் இருந்து அரசு காலனி வழியாக வாங்கல் செல்லும் சாலை, ஈரோடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேருடன் சாலையில் சாய்ந்தன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் வந்து அந்த மரத்தை அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைந்தது.

மழையளவு

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-16, பரமத்தி-13, குளித்தலை-25, தோகைமலை-15, கிருஷ்ணராயபுரம்-37, மாயனூர்-55, கடவூர்-70, பாலவிடுதி-126, மைலம்பட்டி-83.

Next Story