நண்பருடன் குளிக்க சென்ற போது பரிதாபம்: குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


நண்பருடன் குளிக்க சென்ற போது பரிதாபம்: குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 May 2020 10:32 AM IST (Updated: 19 May 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை, 

நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

புதுக்கோட்டை டவுன் கே.எல்.கே.எஸ்.நகரை சேர்ந்த முகமது மைதீனின் மகன் முகமது உசேன் (வயது 29). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை தானேதி குளத்தில் குளிப்பதற்காக முகமது உசேன் தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது நண்பர் அருகில் சென்ற நிலையில் முகமது உசேன் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், டவுன் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முகமது உசேனின் உடலை மீட்டனர். மேலும் அவரது உடலை டவுன் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பருடன் குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மணல் கடத்தியவர் கைது

*மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்பூர்பட்டி, நால்ரோடு அருகே வந்த டிப்பர் லாரியை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மதயானைப்பட்டி அருகே உள்ள கோரையாற்றுப்பகுதியில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்தது பள்ளத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் செல்வம் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு உணவு

*சட்ட உரிமை பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் அருண்சித்தார்த், மாநில இளைஞர் அணி செயலாளர் பந்தலராஜா ஆகியோரின் ஆணைக்கிணங்க போலீசாருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜஸ்டின் ஆல்பர்ட்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் அலுவலர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

மின்னல் தாக்கி பசுமாடு செத்தது

*விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் திடீரென பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் மழை பெய்தது. இதில் கொடும்பாளூர் வட்டம் காளப்பனூரை சேர்ந்த ராசு வீட்டில் கட்டிவைத்திருந்த பசுமாடு மின்னல் தாக்கியதில் செத்தது. இதுகுறித்து தகவலறிந்த கொடும்பாளூர் கால்நடை மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பசுமாட்டை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைத்தனர்.

மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம்

*பொன்னமராவதி அருகே நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெரியய்யா (42). பொன்ன மராவதி மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று வேகுப்பட்டியை அடுத்த பாண்டிமான் கோவில் தெருவில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் பெரியய்யா அங்கு சென்று ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பெரியய்யா மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மது விற்றவர் கைது

*காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் தலைமையில் போலீசார் நல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நல்லூர் கிராமத்தில் வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்ற வீரசேகர் என்பவரை கைது செய்து, 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டிராக்டர் பறிமுதல்

*காரையூர் போலீசார் கண்ணியாப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரியகண்மாயில் இருந்து டிராக்டரில் அப்பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் மணல் ஏற்றிக்கொண்டிருந்தார். போலீசார் வருவதை பார்த்த அவர் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டார். இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய வெள்ளைச்சாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story