‘உம்பன்’ புயலால் நள்ளிரவில் சூறாவளி: ராமேசுவரத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை
ராமேசுவரத்தில் நள்ளிரவில் வீசிய சூறாவளியால் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனைக்குளம்,
வங்கக்கடலில் உருவாகிய ‘உம்பன்’ புயல் எதிரொலியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசியது. இதனால் சிறிது நேரத்திலேயே ராமேசுவரம் தீவுப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் வீசிய சூறாவளியால், ராமேசுவரம் மல்லிகைநகர், மார்க்கெட் தெரு ஆகிய பகுதியில் நின்ற தென்னைகள் விழுந்து 2 வீடுகள் சேதம் அடைந்தன. இதேபோல மருதுபாண்டிநகரில் ஒரு வீட்டின் கூரையும் சேதம் அடைந்தது.
காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த 10 படகுகள், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நின்ற 30 நாட்டுப்படகுகள், சில பைபர் படகுகள், மண்டபம் கடல் பகுதியில் நின்ற 20 விசைப்படகுகள், தங்கச்சிமடம், அந்தோணியார்புரம் பகுதிகளில் நிறுத்தி இருந்த 20 நாட்டுப்படகுகள் என ஏராளமான படகுகளின் நங்கூரக்கயிறு அறுந்தன.
படகுகள் சேதம்
இவற்றில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கடும் சேதமடைந்தன. பல படகுகள் கரைகளுக்கு இழுத்து வரபட்டு ஒதுங்கி கிடந்தன. சில படகுகள் முற்றிலும் சேதம் ஏற்பட்டு கடலிலேயே மூழ்கின. அவற்றில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டன.
இதேபோல ராமேசுவரம் தீவுப்பகுதி முழுவதும் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் முறிந்தன. மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டதால், ராமேசுவரம் பகுதியில் மின்வினியோகம் சீரடைந்தது.
கண்ணீரை துடைக்குமா?
படகுகள் மூழ்கியது குறித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறியதாவது:-
கடந்த 1½ மாதமாக மீனவர்களுக்கு வருமானம் இல்லை. இதனால் மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது சூறாவளியில் சிக்கி ஏராளமான படகுகள் சேதமடைந்தன. சில படகுகள் கடலுக்குள் மூழ்கிவிட்டன. படகுகளை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் அரசு உரிய நிவாரணம் அளித்து, மீனவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story