செரியலூர் இனாம் கிராமத்தில் இடி விழுந்து மின்சாதன பொருட்கள் சேதம் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்து விழுந்தன
செரியலூர் இனாம் கிராமத்தில் இடி விழுந்து மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மேலும் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
கீரமங்கலம்,
செரியலூர் இனாம் கிராமத்தில் இடி விழுந்து மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மேலும் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
சூறைக்காற்று வீசியது
கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான உம்பன் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியது. சூறைக்காற்றுடன் அடுத்தடுத்து மின்னல், இடியும் விழுந்தது. ஆனால் மழை பெய்யவில்லை.
ரூ.3 லட்சம் மின்சாதன பொருட்கள் சேதம்
இந்த நிலையில் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதியான செரியலூர் இனாம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மின்னலைத் தொடர்ந்து இடி விழுந்தது. இந்த இடி மோகன்தாஸ் என்பவரின் வீட்டின் அருகில் நின்ற தென்னை மரத்தில் விழுந்ததில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள், மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்சாதன பொருட்கள், பீரோக்கள் தூக்கி வீசப்பட்டு உடைந்து சேதமடைந்துள்ளது. மேலும் பல்புகள், மின்விசிறி மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் எரிந்து நாசமடைந்துள்ளது. இடி விழுந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் தூக்கிவீசப்பட்டதில் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உடனடியாக கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை அடித்து தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.
மேலும் அதே பகுதியில் பல வீடுகளிலும் இருந்த மின்சாதன பொருட்கள், இடி தாக்கி சேதமடைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும்.
மரங்கள் சாய்ந்தன
மேலும் சூறைக்காற்றில் வாழை மற்றும் பல வகையான மரங்களும் சாய்ந்து விழுந்தன. இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், கஜா புயலில் ஒட்டுமொத்த மரங்களையும் இழந்து மீண்டும் விவசாயம் செய்து வரும் நிலையில், மீண்டும் சூறைக்காற்று வீசியதில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் முடங்கியுள்ள நிலையில், சூறைக்காற்று சேதமும் அதிகமாக உள்ளது. எனவே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story