கடைகளை திறக்க அனுமதி கேட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


கடைகளை திறக்க அனுமதி கேட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 19 May 2020 5:53 AM GMT (Updated: 19 May 2020 5:53 AM GMT)

கடைகளை திறக்க அனுமதி கேட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெரம்பலூர், 

கடைகளை திறக்க அனுமதி கேட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவில் தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுடன், மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கு உத்தரவில் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரைக்கு முடி திருத்தும் (சலூன்) கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 500 முடி திருத்தும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், சுமார் 1,500 முடி திருத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம்- முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் இளங்கோவன், நகர தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

அதில், 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் முடி திருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கினை மதித்து நாங்கள் கடையை திறக்காததால் முடி திருத்தும் தொழிலாளர்கள் எவ்வித வருமானமும் இன்றி தவித்து வருகிறோம். அதுமட்டும் இன்றி கடை வாடகை, மின் கட்டணம், வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவிற்கு பணம் இல்லாமல் திண்டாடி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்க விதிகளுக்கு உட்பட்ட சமூக இடைவெளி கடைபிடித்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும் தொழிலை செய்வதற்கு முடி திருத்தும் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ள கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் போதாது. ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Next Story